Thursday, April 21, 2011

ஆணின் காதல்...!

பணி நிமித்தமாக, ஒரு நாள் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல வேண்டி இருந்தது, மு.க. ஸ்டாலினுடன்!
அன்புடன் வரவேற்றார். அருமையாக உபசரித்தார். அவருடைய பிரசார வாகனத்தில் கூடவே ஏற்றிக் கொண்டார்.

தேர்தல் வாக்குறுதிகள்... சூடான அரசியல்... ஆரவாரமான மக்கள் கூட்டம்... இவற்றுடன் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருந்தது, அன்றைய தினம்!

மாலை 3-15 மணி இருக்கும்.
விறுவிறுப்பாக வாக்குவேட்டையாடிக் கொண்டிருந்த ஸ்டாலினிடம் செல்பேசி ஒன்றை நீட்டினார், அவரது தனிச் செயலர்.
'யார்...?' என்று செய்கையில் கேட்டார், ஸ்டாலின்.
"அண்ணி..." என்றார், அந்த செயலர்.
செல்லை வாங்கி சிறிது நேரம் பேசிய ஸ்டாலினை கவனித்தேன். மலர்ச்சி தெரிந்தது அவரது முகத்தில்.

இரவு, சுமார் 7 மணி.
பிரசார வாகனத்தின் 'டேஷ் போர்டில்' இருந்து செல்பேசியை எடுத்த ஸ்டாலின், முதலில் அழைத்தது, அவரது மனைவியைத் தான்!

இரவு 10 மணிக்கு பிரசாரம் முடிந்தது. சேலம் சென்று கொண்டிருந்தோம். மீண்டும் ஒரு முறை தமது மனைவியை செல்லில் அழைத்து, அன்றைய தினத்தின் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார், ஸ்டாலின்!

என்னை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, ஸ்டாலினின் இந்த செயல்!
பக்கத்தில் இருந்து பார்த்த எனக்கு, அன்றைய நாள் எத்தனை பரபரப்பானது என்பது நன்றாக தெரியும்.
அத்தனை பணிக்கு நடுவிலேயும், மனைவியுடன் பேச நேரம் இருந்தது, ஸ்டாலினிடம்...!

வழக்கறிஞர் செல்லமுத்து என்ற நண்பர் அடிக்கடி சொல்லுவார்...
"24 மணி நேரமும் வேலை இருக்கற ஆள் யாருமே இல்ல சார்... நேரமில்லனு சொன்னா, அது பொய் தான்...!"
பொதுவாகவே 'நேரமில்லை' என்று சொல்வதை ஏற்க மறுக்கும் அந்த நண்பர், நட்புக்கோ, குடும்பத்துக்கோ நேரமில்லை என்றால் உக்கிரமாகி விடுவார்.

காதலிக்கும் பெண்ணுக்காக பல மணி நேரம் தவமிருக்கும் ஆண்கள் சிலர், திருமணத்துக்குப் பின்னர் மனையாளுக்கு போதிய நேரம் ஒதுக்காதது, அவர்களின் மண வாழ்வில் சிக்கல் வர முக்கிய காரணங்களில் ஒன்று...!

இதற்கு அர்த்தம், ஆண்களுக்கு திருமணத்துக்குப் பிறகு காதல் போய் விடுகிறது என்பதல்ல! கல்யாணத்துக்குப் பின் கடமை அதிகமாகி, வேலையில் மூழ்கிப் போகும் ஆண்கள், நேரத்தை பணிக்கே பறிகொடுத்து விடுகின்றனர்.
சரி... 'கிணத்து வெள்ளத்தை ஆற்று வெள்ளமா எடுத்துப் போய்விடப் போகிறது?' என்ற அலட்சியம் சிலருக்கு. 'அது தான் நம்மவராகி விட்டாரே... பிறகு என்ன...?' என்கிற தைரியம் சிலருக்கு!
குடும்பத்துக்காக பணம் சேர்க்கும் மும்முரத்தில், குடும்பத்தை கவனிக்கத் தவறுவது, முதலுக்கே மோசமாகி விடும் என்பதை புரிந்து கொள்வதில்லை, அந்தச் சிலர்!

அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றும் தோழர் அரவிந்த், காதல் கடிமணம் புரிந்தவர். 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
ஒரு நாள் மாடிப் படியில் விழுந்துவிட்டார், அவரது மனைவி! இந்த தகவல் வந்ததும் பதறிப் போனார், அரவிந்த்!
"சார்... என் வைஃப் படியில விழுந்துட்டா... புறப்படட்டுமா சார்...?" சொல்லும் போதே கம்மி விட்டது அரவிந்தின் குரல். அந்த பதற்றத்தில் தெரிந்தது, அவரது காதல்!

மனைவிக்கு சின்ன காயம் என்றால் கூட துடி துடித்துப் போகும் கணவர்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்.

என் அம்மாவுக்கு அறுவை சிகிச்சை ஒன்று நடந்த போது, 4 மணி நேரத்துக்கு மேல் 'ஆபரேஷன்' அறைக்கு வெளியிலேயே, துளி நீர் கூட அருந்தாமல், என் அப்பா நின்றபடியே காத்திருந்தது, இன்றைக்கும் கூட என் கண்ணிலேயே நிற்கும் காட்சி!

தொழில்... அதில் முன்னேற்றம்... இதெல்லாம் மிகவும் முக்கியம்!
ஆனால், எதற்காக உழைக்கிறோம்... யாருக்காக வாழுகிறோம்... என்பது அதை விட முக்கியமல்லவா...?
"உனக்காகத் தானே உழைக்கிறேன்" என்ற வார்த்தைகள் மட்டும் பெண்களுக்கு மகிழ்ச்சி தருவதில்லை. அதை செயலில் காட்டுவது அவசியம். ஒரே நோக்கலில் உணர்ந்து கொள்ள நாம் 'அண்ண'லும் அல்ல... நம்மவள் 'அவ'ளும் அல்ல...!

மனைவிக்கும், குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குவது முதல் விஷயம்.
அதை விட, அவர்களுடன் காதலை பகிர்ந்து கொள்வது ரொம்பவே அத்யாவசியமான விஷயம்.

ஏனென்றால்... மனதில் மட்டும் காதல் இருந்து பயன் என்ன...?

Sunday, March 6, 2011

"சங்கீதா...!"


"மார்ச் 6 - சங்கீதாவின் திருமணம்"
குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்ததை காலையில் பார்த்ததும் பகீரென்று இருந்தது.

3 வாரங்களுக்கு முன்...
என் திருமணம் முடிந்து, நானும் மனைவியும் சாப்பிடச் சென்று கொண்டிருந்த போது செல்லில் வந்தது, சங்கீதாவிடம் இருந்து அழைப்பு.
"சார்ர்ர்ர்ர்ர்..." வழக்கமான உற்சாகத்தோடு அழைத்து வாழ்த்து சொன்ன சங்கீதா, 'காலையில் பணி காரணமாக திருமணத்துக்கு வரமுடியவில்லை' என்றும், 'மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு நிச்சயம் வருவ'தாகவும் சொன்னார். சொன்னபடியே, அகிலாவுடன் 'டாண்...' என்று 6 மணிக்கெல்லாம் ஆஜரானார்.

கண்களை சுருக்கிக் கொண்டு, மேல் பற்கள் தெரியும் 'ட்ரேட் மார்க்' சிரிப்புடன் மேடை ஏறி, அட்டகாசமாக வாழ்த்து கூறிய சங்கீதா, இரவு ஏறத்தாழ 9 மணி வரை இருந்து விட்டுத் தான் போனார். இடையே, நண்பர்கள் வற்புறுத்தலால் நான் பாடல் ஒன்றை பாடிய போது, ஜெயலட்சுமியுடன் சேர்ந்து சங்கீதா உற்சாக குரலெழுப்பிய காட்சிகள், என் திருமண சி.டி.யின் 'ஹைலைட்'.

அப்போது, என் பாட்டுக்கு ஆடப்போவதாக சொன்ன அகிலாவை அடக்கிய சங்கீதா, தன் திருமணத்தில் அவற்றை வைத்துக் கொள்ளுமாறு கூறி இருக்கிறார்.

இதோ வந்து விட்டது, மார்ச் 6!
சங்கீதாவின் திருமணம்... நடந்திருக்க வேண்டிய நாள்!

சென்னிமலையைச் சேர்ந்த சங்கீதா, படித்து முடித்துவிட்டு சென்னை வந்தபின் 'சைதைவாசி'யாகிப் போனார்.
சத்யராஜின் 'பங்காளி' படத்தில் வரும் 'சைதை தமிழரசி' போல... நான் சங்கீதாவை சைதை சங்கீதா என்று செல்லமாக சீண்டுவது வாடிக்கை.
அதே சைதாப்பேட்டையில் சங்கீதாவின் வாழ்க்கை முடிந்து போனது, யாரும் எதிர்பாராத அதிர்ச்சி.

ரயிலில் அடிபட்டு இளம் பெண் பலி என்ற செய்தி, ஊடவியலாளனான என்னை பெரிதாக பாதிக்கப் போவதில்லை. நாள்தோறும், வெட்டியான்களை விட அதிக பிணங்களை பார்ப்பவர்கள் நாங்கள்.
ஆனால், சைதை ரயில் நிலையத்தில், தண்டவாளங்களை கடந்து செல்லுகையில், ரயிலில் அடிபட்டு சங்கீதா இறந்து போனார் என்கிற செய்தியை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது.
இன்னும் சிலர், ரயிலின் குறுக்கே தானாக விழுந்து சங்கீதா இறந்தார் என்று சொன்ன போது, ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது.

சக ஊழியர் என்பதைத் தாண்டி, சங்கீதாவை தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவன் நான்.
அம்மாவுடைய வருத்தங்கள், அண்ணியுடனான பேதங்கள், அறைத் தோழிகளுடனான கிண்டல்... கேலிகள், அலுவலகத்தில் தன்னைப் பற்றிய வதந்திகள்... சர்ச்சைகள், பொருளாதார நிலை, ஊதியப் பற்றாக்குறை என்று பலவற்றையும் என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
உண்மையாக உழைப்பவர்களை பெரும்பாலானோர்க்கு பிடிக்கும். சங்கீதாவை எனக்கு பிடித்ததற்கான காரணமும் அதுவே.

சங்கீதாவின் துணிச்சலும் அபாரமானது.
சென்னையில் இருந்து ஈரோடு சென்ற ரயிலில் மது குடித்துவி்ட்டு கலாட்டா செய்த நபரை தூக்கிப்போட்டு மிதித்ததாகட்டும்... அலுவலகத்தில் அபாண்டமாக பேசிய ஒருவனை நார் நாராக பிய்த்து எடுத்ததாகட்டும்... சங்கீதா குறிப்பிடத்தகுந்த அளவுக்கு தைரியசாலி!

அவருடன் பழகிய யாரும், அவர் தானாக ரயிலில் விழுந்திருக்க மாட்டார் என்பதை அடித்துச் சொல்லி இருப்பார்கள். ஆனாலும், மரணத்துடன் பல விடை காண இயலா மர்மங்களை விட்டுச் சென்றுள்ளார், சங்கீதா.
எந்தச் சூழலில், எப்படி வந்தது முடிவு... என்பது தெரியவில்லை. விபத்தோ, தன் தவறோ... எதுவாயிருந்தாலும் தவிர்த்திருக்கலாம் என்றே கருதுகிறேன்.

சங்கீதாவின் திடீர் மறைவு... அலுவலகத்தில் எல்லாரையும் உலுக்கி எடுத்துவிட்டது.
சிலருக்கு வாழ்க்கை பற்றிய பார்வையையே கூட மாற்றி விட்டது.

ஒவ்வொருவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் மாறுபடும். ஆனால், நிச்சயம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது உண்டு.

என் தாய் மாமா ஒருவர்.
அவருக்கு 7 ஆண் வாரிசுகள். 4 பெண் பிள்ளைகள்.
அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியம் மிகும்.
11 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்குள் குடும்பத்தில், பணி சூழல்களில் எத்தனை சிக்கல்களை அவர் சந்தித்திருப்பார். அவற்றையெல்லாம் திறம்பட சமாளித்து இன்றைக்கு மிகப்பெரிய குடும்பத்தின் ஆணி வேராக இருந்து கொண்டிருக்கிறார்.

பெற்றோர் மேலான பற்று... மனைவி மீதான காதல்... குடும்பத்தின் மீதான பாசம்... சுற்றத்தினர் மீது நேசம்... இவை தான், எனக்குத் தெரிந்தவரை, வாழ்க்கையின் அடிப்படை!

எங்கு அன்பும், தன்னம்பிக்கையும் குறைகிறதோ, அங்கு தான் சிக்கல்கள் மிகும்.
அமைதியாக, நம்பிக்கையுடன் எதிர்கொண்டால் எந்த பிரச்சினையுமே தூசு தான்.

தொலைப்பதற்கு வாழ்க்கை மலிவான விஷயம் அல்ல.

Monday, November 1, 2010

எத்தனை வருஷமா காதலிக்கிறீங்க...?



ரொம்ப நாள் கழித்து ஆர்குட் பக்கம் போன போது, பிறந்த நாள் அலர்டை கவனித்தேன்.
அக்டோபர் 31 - ஸ்ரீராமின் பிறந்த நாள்!

ஸ்ரீராமைப் பற்றிய நினைவுகளிலேயே, எத்தனை ஆண்டுகளானாலும் மறக்க முடியாதது, அவனது திருமண வரவேற்பு...!

நண்பன் தவுலத் ராமன் ஒரு நாள் மதியம் திடீரென்று செல்பேசியில் அழைத்திருந்தான். ஸ்ரீராமுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும், வரவேற்பு நிகழ்ச்சிக்கு பழைய நண்பர்கள் எல்லாரும் வரப் போவதாகவும் சொன்னான். நானும் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினான். பிறகு, ஸ்ரீராமும் பேசினான். நேரில் பார்த்து அழைப்பிதழ் தர விரும்புவதாகக் கேட்டான். நேர விரயம் கருதி, பார்மாலிடிகள் தேவையில்லை என்று சொல்லிவிட்டேன்.

ஸ்ரீராமும் நானும் 12-ம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள்.
எங்களுக்குள் அவ்வளவாக நெருக்கம் இல்லை. ஆனால், சில முறை ஒன்றாக ஊர் சுற்றிய எங்களின் பெருங் கும்பலில் ஸ்ரீராமும் நானும் சேர்ந்து இருந்திருக்கிறோம்.

அப்ரோஷா, வசந்த், ராஜீவ், ரவி, ஸ்ரீராம், சிவசங்கர், தவுலத் ராமன்... இன்னும் ஏகப்பட்டவர்களுடன் நானும் சேர்ந்து... மெரீனா கடற்கரை, உதயம் திரையரங்கில் "ஈவில் டெட் - பார்ட் 3" படம், ஏதோ ஒரு உணவு விடுதியில் மாலைச் சிற்றுண்டி, நடுரோட்டில் ரகளை என்று அதம் செய்த ஒரு சுதந்திர தினத்தை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது...!

பள்ளித் தோழர்களைப் பார்த்து 10-12 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தது. ஸ்ரீராமின் கல்யாண வரவேற்புக்கு பலர் வருவதாகச் சொன்னான், தவுலத் ராமன். என்ன வேலை இருந்தாலும் வரவேற்புக்கு செல்வது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

அந்த நாளும் வந்தது...!
அவசர அவசரமாக அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டிருந்தேன்.
கல்பனாவிடம் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது. "நாங்கள் எல்லாம் வந்துவிட்டோம். நீங்கள் எப்போது வருகிறீர்கள்...?"

அடித்துப் பிடித்து மாலை 7 மணிக்கு ராஜா முத்தையா மன்றத்தை அடைந்தேன். கல்பனாவை செல்லில் அழைத்தேன். 'வாசலில் உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் பார்' என்றாள்.
பார்த்தேன்.
"ஹே..." என்று உற்சாகத்துடன் கைகளை அசைத்துக் கொண்டு நின்றிருந்தனர், தோழியர்கள்...!
கல்பனா, கிருத்திகா, 'லொட்டை' காயத்ரி, ப்ரவீணா, அவளது குட்டிப் பையன், பாரதி, அவளது கணவர், மகள் எல்லோரும் இருந்தனர். பல ஆண்டுகள் கழித்து இவர்களைப் பார்க்கிறேன். அதுவும் ஒரே இடத்தில்...!

கொஞ்ச நேரத்தில் சீனிவாசன், வி.டி. லோகநாதன், தவுலத், அவனது மனைவி, மகன், டேவிட், அவனது மனைவி எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ஸ்ரீராமை வாழ்த்துவதற்காக வரிசையில் சென்று நின்றோம்.

அதற்குள் ஷ்ஷ்ஷ்ஷுகன்யா அவளது கணவர் மற்றும் மகனுடன் வந்துவிட்டிருந்தாள். எங்கள் வகுப்பில் முதன் முதலில் மணமானது ஷுகன்யாவுக்குத் தான் என்று நினைக்கிறேன். கண்ணாடி அணிந்திருந்தாள். பையன் நன்கு வளர்ந்திருந்தான்.
(சுகன்யாவை ஷுகன்யா என்று அழைப்பதற்கு காரணம், அவளுக்கு 'சு' என்ற எழுத்தை உச்சரிக்க வராது. எல்லாவற்றும் 'ஷு' தான்...!)
ஒரே வகுப்பு தான் என்றாலும், சுகன்யாவுக்கும் எனக்கும் பள்ளியில் அவ்வளவு பழக்கமில்லை. சித்ரா, ரூபாலி, ஷீபா, வள்ளி என சுகன்யாவுக்கு பிரத்யேக நண்பர்கள் குழு உண்டு. அவர்களில் சித்ராவும் ரூபாலியும் தான் என்னுடைய அரட்டைக் கும்பல். அதனால், சுகன்யாவை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் தம்பதி சமேதராகப் பார்த்தது ரொம்பவே மகிழ்வாக இருந்தது.

வரிசையில் கொஞ்ச நேரம் நின்று, மேடை ஏறி ஸ்ரீராமை வாழ்த்தினோம். எல்லோரும் ஒன்றாக நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டோம். நான் வாங்கிச் சென்றிருந்த மலர்ச் செண்டை கொடுத்து விட்டு, ஸ்ரீராமுடன் கைக் குலுக்கினேன். அப்போது அவன் என்னைப் பார்த்த பார்வைக்கு அர்த்தம் புரியவில்லை! ஒரு வேளை, இத்தனை ஆண்டுகள் பார்க்காததால் நான் யார் என்பது ஸ்ரீராமுக்கு அடையாளம் தெரியவில்லையோ என்று தோன்றியது...!

ஸ்ரீராமிடம் எதுவும் சொல்லவில்லை.
நண்பர்களிடம் சொன்னேன்.
"சீ... சீ... அப்படி எல்லாம் இருக்காது. உனக்கு ஏம்ப்பா இப்படி எல்லாம் தோணுது...?" கிருத்திகா சமாதானம் சொல்லி உணவு அருந்த அழைத்துச் சென்றாள்.

கிருத்திகாவும் நானும் அருகருகே அமர்ந்து கொண்டோம். மற்றவர்களும் அடுத்தடுத்து அமர்ந்தார்கள். கெக்க பிக்கே என்று கண்டதையும் பேசிச் சிரித்துக் கொண்டே சாப்பிட்டதில் 10 ஆண்டுகள் கரைந்து விட்டிருந்தன...! இவ்வளவு கடுமையான பணிச் சூழலுக்கு நடுவே அந்த நிமிடங்களில் மனது அத்தனை இலகுவாகிப் போயிருந்தது.

ஸ்ரீராமின் கல்யாணம் பற்றி பேச்சு திரும்பியது. இது காதல் திருமணமாம். அடடே...!

"நம்ம செட்ல, இப்ப வந்திருக்கிறவர்களில்... நிறைய பேர் லவ் மேரேஜ் தான்...! தெரியுமா...?" என்றாள் கிருத்திகா.
'அப்படியா...?' புருவம் உயர்த்தினேன்.
"ஆம்..." என்று கூறி பட்டியல் சொன்னாள். அந்த பட்டியலில் முதல் பெயர் அவளுடையது தான்.

ஆர்வம் தாங்காமல் கேட்டேன்... "நீ எத்தனை வருஷமா லவ் பண்ண...?"
"எட்டு வருஷம்...!" என்றாள் கிருத்திகா
"அடேயப்பா...! எட்டு வருஷம் காதலிச்சி... எப்போ கல்யாணம் பண்ணிகிட்டீங்க...?" என்றேன்.
"ஏய்...! குழப்பாதே...! எனக்கு திருமணமாகி 4 வருஷம் ஆகுது...! அதுக்கு முன்னாடி 4 வருஷம் லவ் பண்ணோம்...! மொத்தம் 8 வருஷம் ...!" என்றவள், "கல்யாணம் ஆனதும் லவ் போயிடுமா என்ன...?" என்று கேட்டாள்...!

கிருத்திகாவின் கேள்வி ரொம்பச் சரியானது தான்...!

உடனே, கல்பனாவிடமும், காயத்ரியிடமும் என் கேள்வியை திருத்திக் கேட்டேன்.
"எத்தன வருஷமா காதலிக்கிறீங்க...?"
ஆளுக்கொரு பதில் சென்னார்கள்...!

ஆரம்பத்தில் இனிக்கும் காதல், கல்யாணத்துக்குப் பிறகு கசந்து விடும் என்று சிலர் தவறான வியாக்யானம் சொல்வார்கள். தோற்றுப் போய், விவாகரத்தில் முடிந்த சில காதல் மணங்களை சுட்டிக்காட்டுவர் அவர்.

எனக்கு இதில் கருத்து பேதம் உண்டு...!

காதல், நாளுக்கு நாள் வளரக் கூடியது என்பது என்னுடைய எண்ணம்...! அசைக்க முடியாத நம்பிக்கை...!
இரு உள்ளங்களுக்கு இடையே காதல் இருக்கும் பட்சத்தில் அவை இன்னும் நெருக்கமாகத் தானே ஆகும்...?
அப்படி இருக்கையில், மணமான பின் காதல் எப்படி தேய்ந்து போகும்...?

ஒரு வேளை திருமணத்துக்குப் பிறகு தீர்ந்து போயிருந்தால், அந்த இரு தனி நபர்களுக்கு இடையில் எப்போதுமே காதல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன்.

என் பள்ளித் தோழிகளின் காதல் பற்றிய தெளிவு கண்டு மகிழ்ச்சியாக இருந்தது...!

Friday, October 22, 2010

அன்பிலார் எல்லாம்...!


வெடிகுண்டு மிரட்டல்களைப் பற்றி நானே நிறைய செய்திகளை ஒளிபரப்பி இருக்கிறேன்...!
"பள்ளிக்கு குண்டு மிரட்டல்... மாணவர்கள், பெற்றோர் பீதி" என்றெல்லாம் செய்தி எழுதி இருக்கிறேன்.

ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வந்தால், ஒரு நிறுவனம் எப்படி அல்லோகலப்படும் என்பதை அண்மையில் தான் நேரடியாக தெரிந்து கொண்டேன்!

எங்கள் அலுவலகத்தின் வரவேற்பறைக்கு வியாழக்கிழமை இரவு சுமார் 8-15 மணி வாக்கில் மர்ம தொலை பேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அதில் பேசிய நபர், அலுவலகத்தின் ஓரிடத்தில் குண்டு வைத்திருப்பதாகவும், அது இன்னும் சில நிமிடங்களில் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

அவ்வளவு தான்...! தொற்றிக் கொண்டது பரபரப்பு...!

போலீசார் வரவழைக்கப்பட்டனர்!
மோப்ப நாய் 'அசோக்' அழைத்து வரப்பட்டான்!
வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வந்தார்கள்!
இணை ஆணையர் சக்திவேல் தலைமையில் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று அங்குலம் அங்குலமாக பரிசோதித்துக் கொண்டு இருந்தார்கள் போலீசார்.

எங்கள் செய்திப் பிரிவுக்குள்ளும் வந்தார்கள்.

ஒரு காவலர் வந்து சோதனையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நானும் தலையாட்டினேன்.

ஆசிரியர்க் குழு அறை, செய்தியாளர் பிரிவு, படப்பிடிப்பு அரங்கம் தொடங்கி கழிவறை வரை சோதனையிட்டனர்...!

ஒரு ஓரத்தில்... வரிசையாக சில அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில், 'அசோக்' சுவாரஸ்யமாக மோப்பம் பிடிக்க...

உடன் இருந்த போலீசார் என்னவோ ஏதோ என்று அந்தப் பகுதியை முனைப்புடன் சோதனையிட்டனர்.

பார்த்தால், அங்கு... ஒரு பொட்டலம் மடித்து வைக்கப்பட்டு இருந்தது!

போலீசாருக்கு வியர்த்து விட்டது!

அவர்கள் கையில் இருந்த மெட்டல் டிடெக்டர் கருவியை வைத்து சோதனையிட்டனர். ஆனால், அந்தக் கருவி வித்தியாசமாக எந்த சப்தத்தையும் எழுப்பவில்லை!

சரி... என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிட துணிந்து, ஒரு போலீஸ்காரர் அந்த பொட்டலத்தை கையில் எடுத்தார்...!

எல்லோரும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்க...

குளிர்சாதன அறையிலும் வழிந்து கொண்டிருந்த வியர்வையை சட்டைக் கையில் துடைத்து விட்டுக் கொண்டு, பொட்டலத்தை மெல்ல திறந்தார், அந்த போலீஸ்காரர்!

எல்லோரும் எட்டிப் பார்த்தால்...

"அடசே..."

பொட்டலத்துக்குள் யாரோ சாப்பிட்டு விட்டு மிச்சம் வைத்திருந்த வடையும், சுண்டலும் இளித்துக் கொண்டு இருந்தது...!

எல்லாருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

'அசோக்'கின் மோப்ப சக்தியை என்னவென்று சொல்வது...?!

தலையில் அடித்துக் கொண்டே போலீசார் அகன்று சென்றார்கள்.

அதற்குள், எனக்கு ஒரு அழைப்பு. எங்கள் செய்தியாளர் ஒருவர் தொலைபேசியில் பேசினார்.

மிரட்டல் அழைப்பு விடுத்தவரை போலீசார் பிடித்து விட்டார்களாம்...!

யாரோ ஒரு 14 அல்லது 15 வயது சிறுவனாம்! விளையாட்டாக செய்தானாம்! அவன் பேசிய எண்ணை வைத்து வளைத்து பிடித்துவிட்டார்கள் போலீசார்!

எல்லா களேபரமும் முடிய, இரவு 11 ஆகி விட்டது...!

அந்தப் பையன் ஏன் இதைச் செய்தான் என்பது தெரியவில்லை. ஆனால், சமீப காலமாக இப்படி வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது புது நாகரீகமாகவே மாறி விட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் எதிர்க் கட்சித் தலைவருக்கும், அவரது பெயரில் உள்ள தொலைக்காட்சிக்கும் கூட சில நாட்களுக்கு முன் சுமார் 10 கடிதங்கள் இதே போன்ற வெடிகுண்டு மிரட்டலுடன் வந்ததாகக் கூறப்படுகிறது.

இது போன்ற மிரட்டல்கள் விடுத்து யாரையும் பணிய வைத்துவிட முடியும் என்று எப்படி நினைக்கிறார்களோ...?

பொது வாழக்கையிலும் சரி... தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி... மிரட்டிப் பணிய வைப்பது என்பது சாத்தியமே இல்லாத செயல்!

வி. சேகர் படங்களில் வருமே... ஆரம்பத்தில் வடிவேலுவின் மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் அச்சப்படும் கோவை சரளா, ஒரு கட்டத்தில் எல்லாவற்றுக்கும் துணிந்து, வடிவேலுவை தூக்கிப் போட்டு பந்தாடுவதை எத்தனை நாள் பார்த்து சிரித்திருக்கிறோம்...!

என்னுடன் பணியாற்றும் தோழி ஒருவர், தமது தனிப்பட்ட பிரச்சினைகளையும் பகிர்ந்து கொண்டு ஆலோசனை நாடுவார். நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்.

சில நாட்களுக்கு முன் அவர் சொன்ன செய்தி திடுக்கிட வைத்தது...!
நாத்தனார்கள் இத்தனை கெடு மதியுடன் இருப்பார்களா என்று நடுங்க வைத்த சம்பவம் அது...!

காதல் திருமணம் செய்து கொண்டவர் என் தோழி.

இந்த ஒரே காரணத்துக்காக...
தோழி கருவுறக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தாராம், அந்த நாத்தனார்...!

இதற்காக, தோழியிடம் என்னென்னவோ சொல்லி மிரட்டி வைத்துக் கொண்டே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், தோழியின் கணவரைப் பற்றி கூட தவறாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார். மற்றவற்றை எல்லாம் நம்பி பயந்து கொண்டிருந்த தோழி, கணவனைப் பற்றி அவரது தங்கையே தவறாக பேசியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்!

நல்ல வேளையாக, கணவரிடமே இது பற்றி தோழி கேட்டு விட்டார். அவரும் தமது தங்கையைப் பற்றி தெரிந்து கொண்டு, தோழியின் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார். ஒரு வழியாக இருவரும் இப்போது அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.யார் படத்தில்...

"வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி - பிறர்
வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி"

... என்ற பாடல் வரிகள் வரும்...!

அதைத் தான் இது போன்ற சம்பவங்கள் நினைவுக்கு கொண்டு வருகின்றன...!

பூமிப் பரப்பின் பெரும் பங்கை போரினால் வெற்றி கொண்ட அலெக்சாந்தரே கூட, போகும் போது 'எதையும் கொண்டு போகவில்லை' என்று காட்டிவிட்டுச் சென்றான்...!

அப்படி இருக்க... அடுத்தவரை மிரட்டிப் பார்க்கும் இது போன்ற அற்ப காரியங்களால் ஆகக் கூடியது என்ன...?

"உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உலகம் அழ வேண்டும்..."

என்கிற அளவுக்கு 'ரொம்ம்ம்ப நல்ல்ல்ல...வ'னாக இருக்க வேண்டியதில்லை.

குறைந்த பட்சம், சக மனிதர்களுக்கு எந்த தொந்தவும் தராமல் வாழ்ந்தாலே, நம்முடைய வாழ்க்கையில் எல்லாமும் நல்லதாகவே நடக்கும்!

Tuesday, August 24, 2010

அன்புக்குரிய பாரதி...


ரக்ஷா பந்தன்...!
ராக்கிக் கயிறு கட்டும் நாள் என்றால் எனக்கு உடனே ஞாபகத்தில் வருவது பாரதி தான்.

எனக்கு உடன் பிறந்த சகோதரிகள் யாரும் கிடையாது. ஆனால், அக்காள், தங்கை உறவுகளில் ஏகப்பட்ட பேர் உண்டு.
என் அப்பாவுக்கு 4 தம்பிகள்...! என் அம்மாவுக்கு 4 அக்காள்கள்...! இவர்கள் அத்தனை பேருக்கும் வச வச என்று பிள்ளைகள் நிறையவே இருக்கிறார்கள். ஏதாவது பண்டிகை என்றால், எங்கள் வீட்டில் திருவிழாக் கூட்டம் தான்...! ஆட்கள் இருந்து என்ன பயன்...? இந்தியை எதிர்த்த குடும்பங்களில் எங்களுடையதும் ஒன்று...! வட நாட்டு பழக்க வழக்கம் எப்படித் தெரிந்திருக்கும்...?

பள்ளிக்கூடத்தைப் பொறுத்தவரை, 11 மற்றும் 12-வது வகுப்புகளில் நாங்கள் மொத்தம் 49 பேர். அதில் 30-க்கும் அதிகமானவர்கள் மாணவிகள் தான்...!
இவர்களில் ஒருத்தி தான் பாரதி...! இப்போது, பாரதி ராஜேஷ்.

பாரதி...! அக்ரகாரத்துப் பெண். ஒரு தங்கை உண்டு. அம்மா, அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!
படிப்பதில் ரொம்பவும் கெட்டிக்காரப் பெண்.
எனக்குத் தெரிந்து பாரதிக்கு எதிரிகளே இருக்க முடியாது. அவ்வளவு மென்மையான குணம் படைத்தவள். எந்த டாம்பீகமும் இருக்காது.

எதேச்சையாக 11-ம் வகுப்பில் ஆரம்பித்தது, ரக்ஷா பந்தன் தினத்தன்று எனக்கு ராக்கிக் கயிறு கட்டி விடும் பாரதியின் வாடிக்கை.

எனக்கு ராக்கிக் கயிறுகளின் மீது லேசான மோகம் உண்டு.
பையன்கள் சிலர், எந்தப் பெண்ணும் ராக்கிக் கயிறு கட்டி விடக்கூடாது என்று நினைப்பது தான் வழக்கம். என் நண்பர்கள் சிலர் கூட அப்படி தப்பி ஓடிய சம்பவங்கள் உண்டு.
என்னைப் பொருத்தவரை, ராக்கிக் கயிறு என்பது அழகான ஒரு பொறுப்பு.
ஒரு பெண்... என்னை நம்பி, தன்னைக் காக்கும்படி கேட்டுக் கொள்கிறாள் என்பது தானே ரக்ஷா பந்தனின் தாத்பர்யம்...? ஒரு ஆண்மகனை துணிச்சலான, பாசமான, நம்பகத்துக்குரிய நபராக ராக்கி அடையாளம் காட்டுகிறது என்பது என்னுடைய எண்ணம். அந்த வகையில், பாரதி எனக்கு தந்தது ஒரு மாபெரும் மரியாதை என்றே கருதுகிறேன்.

இதனால், பாரதி மீது எனக்கு உள்ளூர ஒரு அன்பு உண்டு. அதை பெரிதாக வெளிக்காட்டிக் கொண்டது இல்லை என்ற போதிலும், பாரதியின் சகோதரனாகவே உணர்ந்தேன்.

அந்த நிலையில் தான், பாரதிக்கு 12-ம் வகுப்பில் நிகழ்ந்தது அந்த கொடூரம்...!
எங்கள் வகுப்பில் எல்லோரையும் உலுக்கி எடுத்த விபத்து அது...!

அது ஒரு தீபாவளிப் பண்டிகைக் காலம். பெற்றோருடன் கடை வீதிக்கு ஆட்டோவில் போயிருந்தாள் பாரதி.
திடீரென்று கவிழ்ந்தது ஆட்டோ...! அதற்கு அடியில் சிக்கி முறிந்து போனது, பாரதியின் வலது கை...! சிதைந்து போயின, அவளது விரல்கள்...!
சம்பவத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போனேன் நான்.

கொஞ்ச நாள் மருத்துவமனை வாசம்.
அவ்வப்போது பாரதியை கிருத்திகாவும், சங்கீதாவும் பார்த்து வந்து தகவல் சொல்வார்கள்.
பாரதியின் கையில் ப்ளேட் வைத்து தைத்திருப்பதாக ஒரு முறை சொன்னார்கள்...!
பெரிய அறுவை சிகிச்சை நடந்திருப்பதாக மறுமுறை கூறினார்கள்...!
நாட்கள் கடந்தன.
வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாள் பாரதி.
சற்றே ஆறுதலாக இருந்தது.

இன்னும் சில நாட்கள் கழிந்தன.
எப்படி இருக்கிறாள் என்று பார்ப்பதற்காக 10 பேராக சேர்ந்து பாரதியின் வீட்டுக்குப் போனோம்.
ஒரு அறையில் அமர்ந்திருந்தாள் பாரதி.
"என்ன ஆச்சு...? எப்படி இருக்கே...?" என்று கேட்பதற்கு யாருக்குமே தைரியம் வரவில்லை...!
பாரதியாகவே பேசினாள்.
நலம் விசாரிப்பதற்கு சென்ற எங்களை எல்லாம் "நீ எப்படி இருக்க...? நீ எப்படி இருக்க...?" என்று ஒவ்வொருவராக விசாரித்தாள்.
கையைக் காட்டினாள்.
எல்லோரும் ஏறத்தாழ அழுதே விட்டோம்.

வலது கையில் நீண்ட தூரம் தைத்து வைத்திருந்தார்கள். சில விரல்களையே காணவில்லை...!
பேச்சே வரவில்லை எங்களுக்கு.
என்ன சொல்லி ஆறுதல் சொல்வது...?
இனி எப்படி எழுதுவாள்...?
+2...! அதுவும், பொதுத் தேர்வு...!
அவளுடைய படிப்பு என்னவாகும்...?
எனக்குள் ஏகப்பட்ட கேள்விகள்.

கொஞ்ச நேரம் மவுனமாகவே இருந்து விட்டு புறப்படத் தயாரானோம்.
"டேக் கேர் பாரதி... உடம்பப் பார்த்துக்கோ..."
சொல்லி விட்டு நீண்ட நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
பாரதி சிரித்தாள்.

"என்ன ராஜன்...? நீ வேணும்னா பாரு... இன்னும் கொஞ்ச நாள் தான்... மறுபடி வந்து படிப்பில உன்னோட போட்டி போட ஆரம்பிச்சிடுவேன்..." என்றாள்...!

'அடேயப்பா... இந்தப் பெண்ணுக்குத் தான் எவ்வளவு தன்னம்பிக்கை...!'
மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனாலும், ஒரு விதமான சோகத்துடனேயே விடைபெற்று வந்தோம்.

பரபரவென்று பறந்து போயின நாட்கள்...!
பாரதிக்கும் காயங்கள் ஆறத் தொடங்கின.
சில நாட்களில் பள்ளிக்கும் வந்துவிட்டாள்.

இதில் ஆச்சரியம் என்னவெனில்... இந்த கொஞ்ச நாளில் இடது கையில் எழுதக் கற்றுக்கொண்டு விட்டிருந்தாள்...!
கொஞ்சம் மெதுவாகத் தான் எழுத முடிந்தது. என்றாலும், பாடங்களை கவனித்து எழுதுவதற்கு போதுமானதாக இருந்தது.

ஒரு நாள் பாரதியும் நானும் ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். அவளது நோட்டை வாங்கிப் பார்த்தேன்.
"என்ன ராஜன்... கையெழுத்து கோழிக் கிறுக்கலா இருக்கா...?" பரிதாபமாகக் கேட்டாள் பாரதி.
பொதுவாக பாரதியின் கையெழுத்து குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும்.
"சே சே... என்ன பேசற பாரதி... கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும்..." என்றேன்.

சொன்ன மாதிரியே எல்லாம் சரியானது.
பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாள் பாரதி.

நாங்கள் பள்ளிப் படிப்பை முடித்து 3 ஆண்டுகள் வரை விடாமல் ராக்கி கட்டினாள் பாரதி.
தேடிப் பிடித்து, எங்கிருந்தாலும் என்னை வரவழைத்துக் கூட கட்டியிருக்கிறாள்...!
ஒரு முறை 17-எம் பேருந்தில் சென்று கொண்டிருந்த இருவரும், மிகச்சரியாக ரக்ஷா பந்தன் தினத்தன்று சந்தித்துக் கொண்டோம். வளசரவாக்கத்தில் என்னையும் சேர்த்து கீழே இறக்கி, ராக்கி வாங்கி கட்டினாள், பாரதி...!

அதன் பிறகு, கால ஓட்டத்தில் என்னுடைய இருப்பிடம் மாறி, தொடர்புகள் தொலைந்து போய், நண்பர்கள் திசைக்கொரு ஆளாய் சென்றுவிட்டோம்.

ஆனாலும், ரக்ஷா பந்தன் என்றதும், இன்றைக்கும் கூட சட்டென்று நினைவுக்கு வருவது பாரதி தான்.
கூடவே அவளுடைய தன்னம்பிக்கையும், போராட்ட குணமும்...!

Monday, August 23, 2010

காதல் நல்லது...!


பறிபோனது அமைச்சர் பதவி...!
பெரும் விவாதங்கள் நடந்தேறின, பொது மேடையில்...!
கிழித்தெடுத்தன ஊடகங்கள்...!
இத்தனை சர்ச்சைகளையும் தாண்டி சாதித்து இருக்கிறது, இவர்களின்... காதல்...!

சஷி தரூர் - சுனந்தா புஷ்கர்...!

பாலக்காட்டில் நடந்த இவர்களின் திருமணத்தின் போது தரூரின் முகத்தை பார்த்திருக்க வேண்டும்...! சுனந்தாவை பார்த்த அவரது ஒவ்வொரு பார்வையிலும், ஒரு விதமான நிறைவும் பரிவும் நிரம்பி இருந்ததாகவே தோன்றுகிறது எனக்கு...!

"பொது வாழ்வின்
இழப்புகள் எதுவும்
நிச்சயமாய்ப் பெரிதல்ல...
பெண்ணே...
நீ மட்டும் எனக்குக்
கிடைப்பதாயின்...!"
... என்று புதுக்கவிதை பேசிக்கொண்டு இருந்தன, தரூரின் கண்கள்.

54 வயது மணமகனின் இந்த காதலைக் கண்டு திணறிப் போய் விட்டேன் நான்.

சுனந்தாவைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு அணுவிலும் பூரிப்பும் உற்சாகமும் ததும்பிக் கொண்டு இருந்தது.

இருவருக்குமே இது 3-வது திருமணமாம். எத்தகைய சூழ்நிலையில் அவர்களின் முதல் இரு திருமணங்கள் முடிவுக்கு வந்தன என்பது பற்றி விவாதிப்பது எனக்குத் தேவையற்றது. ஆனால், இந்தத் திருமணத்தில் அவ்விருவரின் நிறைவான காதலைக் காண்கிறேன் நான்.

மறுநாள், ஓணம் கொண்டாட்டத்தின் போது, பார்த்திருக்க வேண்டுமே...! தரூரின் தோளோடு இணைந்து நின்று கொண்டிருந்த சுனந்தாவின் முகத்தில் புதுமணப் பெண்களுக்கே உரிய ஒருவிதமான மந்தகாசம் தெரிந்தது.

உறவுகளின் முக்கியத்துவம் பற்றியும், அவர்களுக்காக அதிக நேரத்தை செலவிட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி அவ்வப்போது சில மின்னஞ்சல்கள் வரும். அவற்றில் ஒன்று தோழி பாரதி அனுப்பியது. ஒரு முதிய தம்பதியரைப் பற்றியது. நம்மில் பலரும் இந்தக் கதையை கேள்விப்பட்டு இருக்கலாம்.

சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர், நியூயார்க்கில் வசிக்கும் தமது மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார்.

"மகனே... உன்னுடைய நேரத்தை கெடுப்பதற்காக மன்னித்து விடு. ஆனால், முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்வதற்காகத் தான் கூப்பிட்டேன். உன் அம்மாவும் நானும் விவாகரத்து செய்யப் போகிறோம். 35 வருட மண வாழ்க்கை கசந்து விட்டது எங்களுக்கு. இனியும் இந்த கொடுமையை சகித்துக் கொள்ள முடியாது..." என்கிறார் அந்தப் பெரியவர்.

அலறி விடுகிறான் மகன். "என்னப்பா சொல்றீங்க...? என்ன பேச்சு இது...?"

"இல்லை மகனே... என்னால் இந்த இம்சையை இனியும் சகித்துக் கொள்ள இயலாது... இது பற்றி இனி பேசக் கூட நான் விரும்பவில்லை. எனவே, உன் அக்காளிடம் நீயே பேசி எங்கள் முடிவைப் பற்றி சொல்லி விடு..." என்று கூறி விட்டு தொலைபேசியை வைத்துவிடுகிறார், அந்தத் தந்தை.

பதறிப்போன மகன், ஓமனில் உள்ள அக்காளை தொலைபேசியில் அழைத்து இந்தத் தகவலை கூறுகிறான். அதிர்ச்சி அடைந்த அவள், சென்னையில் உள்ள அப்பாவை அவசர அவசரமாக அழைக்கிறாள்.

"...என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் இருவரும்...? என்ன ஆகி விட்டது...? தத்துபித்தென்று ஏதும் பேசாமல் அப்படியே இருங்கள்... நானும் தம்பியும் உடனே சென்னை வருகிறோம். அதுவரை எதுவும் செய்யக்கூடாது... புரிகிறதா...?" என்று கத்திவிட்டு தொலைபேசியை வைக்கிறாள்.

மகள் பேசுவதை கேட்டுக் கொண்ட பெரியவர், தொலைபேசியை வைத்து விட்டு, பின்னால் அமர்ந்திருக்கும் மனைவியைப் பார்த்து நிதானமாக் கூறுகிறார்... "எல்லாம் திட்டமிட்டபடி நடந்து விட்டது. கவலைப் படாதே. நம் பிள்ளைகள் இருவரும் இந்த ஆண்டு தீபாவளிக்கு நிச்சயம் சென்னைக்கு வருகிறார்கள். அதுவும், அவர்களது விமான டிக்கெட்டுக்கு அவர்களே செலவழித்துக் கொண்டு வருகிறார்கள்..." என்றாராம்.

இந்தக் கதை நகைச்சுவைக்காக மட்டும் சொல்லப்படுவது அல்ல. இதில் ஒரு நிதர்சனமான உண்மை உண்டு.

உலகில் யாருமே 365 நாளும் வேலையோடு இருப்பதில்லை. நம்மவர்களுக்காக நேரம் செலவிட கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக்கொண்டால், வானம் இடிந்து நம் தலை மீது விழுந்து விடாது. அலுவலக வேலையோ, பணம் சம்பாதிப்பதோ மட்டுமே வாழ்க்கை அல்ல...!

நாம் சம்பாதிப்பதோ, வேலை செய்வதோ எதற்கு...? வேறு யாரோ ஒருவருடைய கனவுகளை மெய்ப்பிப்பதற்காகத் தானே...?
குடும்பமோ, தனிப்பட்ட வாழ்க்கையோ இல்லாமல் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து என்ன தான் பயன்...?

இதில் எனக்கே கூட தனிப்பட்ட சில இழப்புகள் உண்டு.

நானும் கூட பணி நிமித்தமாக சில உறவுகளை, நட்புகளை முட்டாள்தனமாக இழந்திருக்கிறேன். அதை நினைத்து இப்போது வருந்துகிறேன். சில உறவுகளை புதுப்பித்துக் கொண்டு விட்டேன். சில முறிவுகள் சீர் செய்யப்படாமலேயே சிதைந்து போய்விட்டன.

சஷி தரூர் - சுனந்தாவை பொறுத்த வரையில், பொது வாழ்க்கையின் இழப்புகளோ, விமர்சனங்களோ, அவற்றினால் ஏற்பட்டிருக்கக்கூடிய மன உளைச்சலோ, இருவரின் கடுமையான வேலைப் பளுவோ... காதலை எள்ளளவும் சிதைத்ததாக தெரியவில்லை. ஒருவருக்கொருவர் ஆறுதலாக, தேறுதலாக இருந்திருக்கிறார்கள். இப்போது இணைந்தும் இருக்கிறார்கள்.

எத்தனை வயதானாலும், எவ்வளவு சம்பாதித்தாலும், எந்த உயர் பதவியில் இருந்தாலும்...
"காதல் போயின்... காதல் போயின்...
சாதல் சாதல் சாதல்" தானே...?

இவர்களின் காதலுக்கு அடிப்படை என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இருவரையும் வலுவாக பிணைத்து வைத்திருக்கிறது, காதல்.

காரணம் எதுவாயிருந்தாலும், காதல் நன்றே...!

Saturday, June 19, 2010

கோடிகளை மறுக்கும் துணிச்சல்...!


ராவணன் படத்துக்குப் போயிருந்தேன். முதல் நாள்...! இரண்டாவது ஷோ...!

3 காட்சிகளுக்குப் பிறகு நான்காவதாக, 10 மணிக்கு மேல் ஆரம்பிக்கிறது... அப்புறம் ஏன் இரவுக் காட்சியை, செகன்ட் ஷோ என்கிறார்கள்...?
நம்மூரில் சினிமா பிரபலமாகத் தொடங்கிய கால கட்டத்தில், இப்போது இருப்பது போல நான்கு காட்சிகள் எல்லாம் கிடையாதாம். இரண்டே காட்சிகள்...!

இதற்குக் காரணம்...
ஒன்று, படங்களின் நீளம்...!
இரண்டு, படம் காட்டும் கருவிகள் சூடானால், அதை குளிர்விப்பதற்கான இடைவெளி...!
மூன்று, மக்களின் வாழ்க்கை முறை...!
நாளெல்லாம் உழைப்பவர்கள் மாலையில் தான் பொழுதுபோக்க முடியும். அதனால் தான் தெருக்கூத்துகள் மாலையில் அரங்கேற்றப்பட்டன. என்ன தான் இப்போது செவன் ஸ்டார் தியேட்டரெல்லாம் வந்துவிட்டாலும், நாங்க தெருக்கூத்து பார்த்த கூட்டம் தானே...!
(பெரிதாக பேசப்பட்ட செவன் ஸ்டார் தியேட்டரில் சொல்லிக்கொள்ளும் விதத்தில் வசதிகள் எதுவும் இல்லையாமே...?)

அது மட்டுமின்றி... இப்போது இருப்பது போல, எல்லா பக்கங்களிலும் மூடப்பட்ட திரையரங்குகள் அப்போது இல்லை. இருட்டிய பிறகு தான் டென்ட் கொட்டாய்களில் படம் தெளிவாகத் தெரியும். அதனால், மாலையில் முதல் ஷோ...! இரவு, ரெண்டாவது ஆட்டம்...!

ரொம்ப நாளாகி விட்டது, தியேட்டருக்கு போய் சினிமா பார்த்து...!
அரவிந்த், எஸ்.பி.எ., இளமதி, ஞானம், தினேஷ், சந்தோஷ், எழில், சரவணன்... இவர்களுடன் நான்...!
இடம், ஆல்பர்ட். (ஒலி அமைப்பு ரொம்ப கேவலம். பெயருக்குக் கூட குளிர்சாதன வசதி... ஏன், காற்றாடி கூட இல்லை...! ஒரே கச கச...)

தினேஷும் சந்தோஷும் உற்சாக மிகுதியில் கத்தி கூச்சலிட்டுக் கொண்டு இருந்தார்கள். காதுக்குள் இருந்த ஜவ்வில் ஜிவ்வென்று இருந்தது.

நான் பள்ளியில் படித்த போது பூவிருந்தவல்லி (அதாங்க, நம்ம பூந்தமல்லி) சுந்தர் தியேட்டரில் தவுலத் ராமன், ஸ்ரீராம், ரவி, செந்தில், வி.டி., கொசு சிவசங்கர்... இன்னும் சிலரும் சேர்ந்து வி.ஐ.பி. படம் பார்த்தோம்...! சிம்ரன் வரும் முதல் காட்சியில் நாங்கள் செய்த அலப்பறையை நினைத்துக்கொண்டேன். அதற்கு இவர்கள் பரவாயில்லை.

ராவணனில், முதல் காட்சியில் விக்ரம் மலையில் இருந்து குதிப்பதாகட்டும்... ஐஸ்வர்யா ராய் அறிமுகமாகட்டும்... உய்ய்ய்... உய்ய்ய்... என்று விசில் பறந்து கொண்டிருந்தது. இதில் உச்சகட்டம்... 'நம்ம' ரஞ்சிதா தான்...!

ரஞ்சிதாவை திரையில் பார்த்ததுமே தியேட்டர் முழுவதும், காது கிழியும் அளவுக்கு கூச்சலும், விசிலும் பறந்தன. நித்தி... நித்தி... என்று கோஷங்கள் வேறு...! படத்தில் ரஞ்சிதா வரும் ஒவ்வொரு முறையும் கூச்சல்களும், கோஷங்களும் தொடர்நது கொண்டே இருந்தன. 'ரஞ்ச்ச்ச்' வரும் காட்சிகளின் அளவை க்ரஞ்ச்ச்ச் செய்து கத்தரித்து விட்டார்கள் போலும். ரொம்பக் கொஞ்சமே வருகிறார்.

சமீப காலமாக, புதிய நபர்களை சந்திக்கும் போது, தவறாமல் கேட்கப்படும் கேள்வி, "அந்த நித்யானந்தா படத்தை எப்படி எடுத்தீர்கள்...?" என்பது தான்...! முன்பெல்லாம், கலைஞர் கைது செய்யப்பட்ட போது "கொல்றாங்க... கொல்றாங்க..." என்று வந்த குரல் யாருடையது என்று கேட்பார்கள். இப்போது ட்ரென்ட் மாறி விட்டது

மூத்த நிருபர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தேன். அவருக்கு தெரிந்த ஆன்மீகப் பெண்மணி பற்றி சொன்னார். இப்போதெல்லாம் அந்தப் பெண், தமது குருவுடன் ஆன்மீக கூட்டங்களில் பங்கேற்பதே இல்லையாம்! நித்யானந்தா அத்யாயத்துக்குப் பிறகு, எல்லாருடைய பார்வையிலும் ஆன்மீக குருக்களுடன் வரும் பெண் சீடர்களைப் பற்றிய பார்வை வக்கிரமாகி இருக்கிறது என்று ஆதங்கப்பட்டாராம் அந்தப் பெண்மணி.

"ஆனாலும், நாம நித்தி டேப்பை போட்டது தான் சார் ரைட்... அதனால தான் ஓரளவாவது இந்த நித்தி மாதிரி ஆளுங்களோட சாயம் வெளுத்திருக்கு... ஆனா, இந்த கல்கி சாமியார பார்த்தீங்களா...? எவ்வளவு ஆதாரம் இருக்கு...! ஆனாலும், கோர்ட்ல இன்ஜங்ஷன் (தடை உத்தரவு) வாங்கிட்டானுங்களே... அதான் சார்... ஜட்ஜுகள பணம் கொடுத்து விலைக்கு வாங்கிட்டாங்க சார்..." என்றார், நிருபர்.

"நீதிபதிங்க எல்லாம் அவ்வளவு லேசுல விலை போயிட மாட்டாங்களே..." என்றேன்.

அதற்கு, "கொஞ்ச நாளுக்கு முன்னாடி என்னோட வக்கீல் நண்பர் ஒருத்தர் சொன்னார் சார்... சில நீதிபதிகள் ரொம்ப நேர்மையா இருப்பாங்களாம். ஆயிரங்கள்... லட்சங்கள் கொடுத்தா கூட அசர மாட்டாங்க... ஆனா... கோடிகள கொடுத்தா அவங்களையும் விலைக்கு வாங்க முடியுமாம்... நீங்களே சொல்லுங்க சார்... கோடிகளை மறுக்கும் துணிச்சல் யாருக்கு உண்டு சார்...?" அவருடைய கேள்வி ரொம்ப நேரம் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.

சரி தான்... எல்லாருக்கும் ஒரு விலை உண்டு. ஆனால், தகுதிக்கு ஏற்ப அது மாறுகிறது...!
அரசு மருத்துவமனை ஆயாவுக்கு 10 ரூபாய் போதும். மருத்துவருக்கு...?
மருத்துவருக்கு சில நூறுகள், ஆயிரங்கள் போதும்... டீனுக்கு...?
டீனுக்கு ஆயிரங்கள், லட்சங்கள் போதும்... அமைச்சருக்கு...?

இப்படி ஹயரார்கியைப் பொருத்து விலையும் மாறுகிறது. ஏறுகிறது.
காசுக்கு ஏற்ற பணியாரம்...!